Successful Exporters

தென்னை நார் கழிவு ஏற்றுமதியில் 

சாதிக்கும் தூத்துக்குடி

தொழில்முனைவர்export tamil pdf

export tamil pdf

15 ஆண்டுகளாக தொடர்ந்து 

மத்திய அரசின் விருதுexport tamil pdf 

தென்னை நார் கழிவு ஏற்றுமதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அரசின் விருதைப் பெற்று வருகிறது. மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய கயிறு வாரியம், கயிறு பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் அதிக அளவில் கயிறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2013- 2014 மற்றும் 2014- 2015ஆம் ஆண்டுகளுக்கான விருது பெற்ற நிறுவனங்களின் பட்டியலை மத்திய கயிறு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த செறிவூட்டப்பட்ட தென்னை நார் கழிவுகளை ஏற்றுமதி செய்யும் ‘சிவந்தி ஜோ காயர்ஸ்’ என்ற நிறுவனம் 2013-2014ஆம் ஆண்டில் அதிகமாக கயிறு பொருட்களை ஏற்றுமதி செய்த நிறுவனத்துக்கான விருதுக்கும், 2014- 2015ஆம் ஆண்டில் சிறிய அளவிலான கயிறு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து சாயர்புரம் செல்லும் தேரி சாலையில் ‘சிவந்தி ஜோ காயர்ஸ்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை டன்ஸ்டன் டி.ஜோசப் மற்றும் கே.சிவாகர் ஆகியோர் இணைந்து கடந்த 1995ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம், விவசாயத்துக்குப் பயன்படும் நார் கழிவுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. வெளிநாடுகளில் மண்ணில்லா விவசாய முறை அதி கரித்து வருவதால் மண்ணுக்குப் பதிலாக தென்னை நார் கழிவு பயன்படுத்தப்படுகிறது. தென்னை நார் கழிவை விவசாய நிலங்களில் பரப்பி, இயற்கை உரமாகவும், நீர் சேமிப்பு காரணியாகவும், நுண்ணுயிரிகள் வளர்த்து அதன் மூலம் விவசாயத்தைப் பெருக்கவும் பயன்படுத்துகின்றனர்.

மத்திய அரசின் விருது குறித்து சிவந்தி ஜோ காயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டன்ஸ்டன் டி.ஜோசப் மற்றும் இயக்குநரான கே.சிவாகர் ஆகியோர் ‘தி இந்து’ நாளிதழுக்குக் கூறியதாவது: ‘சிவந்தி ஜோ காயர்ஸ்’ நிறுவனத்தைக் கடந்த 1995இல் தொடங்கினோம். விவசாயத்துக்குப் பயன்படும் தென்னை நார் கழிவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். திருச்செந்தூர் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை அமைந்துள்ள கயிறு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தென்னை நார் கழிவை வாங்குகிறோம். விவசாயிகளிடமும் நேரடி யாக தேங்காய் மட்டைகளை வாங்குகிறோம்.

இந்த தென்னை நார் கழிவை ஆலையில் சுத்தப்படுத்தி, பதப்படுத்தி, அதில் பயிர்களுக்கு தேவையான உரங்களையும் சேர்த்து உலர வைக்கிறோம். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி விகிதத்தில் உரங்களைச் சேர்க்கிறோம். நன்கு உலர்ந்ததும் அவற்றை பாக்கெட்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். தென்னை நார் கழிவை கச்சாவாக வாங்கி வந்து பதப்படுத்தி உலர்த்தி உரமாக தயார் செய்ய ஆறு மாதங்கள் ஆகும்.

1 கிலோ முதல் 15 கிலோ வரை பாக்கெட்களில் பேக்கிங் செய்கிறோம். மேலும் 1 டன் வரை யிலும் தனியாக அனுப்புகிறோம். ஹாலந்து, ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 65 நாடுகளுக்கு எங்கள் பொருள் ஏற்றுமதியாகிறது. கடந்த 2013-2014ஆம் ஆண்டு முதன்முறையாக சியோரோ லியோன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்தோம். அந்த நாட்டுக்கு இந்தியாவில் இருந்து இதுவரை யாரும் தென்னை நார் கழிவை ஏற்றுமதி செய்யவில்லை. அந்த நாட்டுக்கு 10 சரக்கு பெட்டகங்களில் 260 டன் ஏற்றுமதி செய்தோம். இதனால் அதிக ஏற்றுமதிக்கான விருதுக்கு எங்கள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு நாங்கள் 35 ஆயிரம் டன் செறிவூட்டப்பட்ட தென்னை நார் கழிவை ஏற்றுமதி செய்கிறோம். 2014- 2015ஆம் ஆண்டின் சிறந்த சிறு தொழில் ஏற்றுமதியாளருக்கான விருதுக்கும் எங்கள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கயிறு வாரியத்தின் விருதை சிவந்தி ஜோ காயர்ஸ் நிறுவனம் கடந்த 2000-2001ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளாக பெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் தென்னை நார் கழிவுக்கு வரவேற்பு இருப்பதால் ஆண்டுதோறும் 10 சதவிகிதம் உயர்ந்து வருகிறது. செறிவூட்டப்பட்ட தென்னை நார் கழிவை ஏற்றுமதி செய்ய சர்வதேச தரச்சான்று உட்பட உலக அளவில் பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றுள்ளோம். எங்கள் நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.40 கோடி அளவுக்கு தொழில் செய்து வருகிறது. 350 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறோம். தற்போது மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் கழிவு பொருட்களைத் தயாரிக்கும் ஆலையைத் தொடங்கியுள்ளோம். அதனைப் பெரிய அளவில் மேம்படுத்துவதே எங்களது எதிர்காலத் திட்டம்” என்றனர். (நன்றி தி இந்து )export tamil pdf